தமிழ்புலிகள் கட்சி பிரமுகர் கத்தியால் குத்திக்கொலை 2 பேர் கைது

கம்பத்தில் தமிழ்புலிகள் கட்சி பிரமுகர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-21 17:35 GMT

கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள சி.எம்.எஸ். நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 35). இவர் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஜோதிமணி (28) என்ற மனைவியும், ஜீவிதா (5) என்ற மகளும் உள்ளனர். ஜோதிமணி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். 
திருநாவுக்கரசு முழு நேரமும் கட்சி பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் ஆங்கூர்பாளையம் சாலையில் டி.டி.வி. தினகரன் நகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பிடத்தை மகளிர் குழு மூலம் நிர்வகித்து வந்தார். 
குத்திக்கொலை
இந்தநிலையில் நேற்று இரவு கட்டண கழிப்பிடம் அருகே திருநாவுக்கரசு கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை கழிப்பறைக்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த திருநாவுக்கரசு உடலை போலீசார் கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி கம்பம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து திருநாவுக்கரசின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
2 பேர் கைது
இந்த கொலை தொடர்பாக கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் டி.டி.வி. தினகரன் நகரை சேர்ந்த பிரகாஷ், கார்த்திக் என்ற 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  


மேலும் செய்திகள்