விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமை தாங்கினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். குறைந்தபட்ச சம்பளமாக ரூ.600 வழங்க வேண்டும்.
சம்பளம் வழங்குவதில் சாதி ரீதியான பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் விவசாய தொழிலாளர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழர் சமூக நீதி கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.