கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க கட்டணம் நிர்ணயம்
தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை,
கொரோனா தொற்றுக்கு போல் கருப்பு பூஞ்சை நோய்க்கும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதில் ஏ1 முதல் ஏ6 தர தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு சார்பில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படியே ஏ1 முதல் ஏ6 தர தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் கட்டணம் பெற வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் கூறியதாவது
கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எண்டோஸ்கோபி செய்வதற்கு ஏ1 முதல் ஏ6 தர தனியார் மருத்துவமனைகளில் ரூ.18,050, எண்டோஸ்கோபி சைனஸ் அறுவை சிகிச்சை மற்றும் எண்டோஸ் கோபி ஆர்பிட்டல் டிகம்ப்ரஸனுக்கு ரூ.23,550, மைக்ரோ டிப்ரைடர் சிகிச்சைக்கு ரூ.25,700 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கண் அறுவை சிகிச்சை
அதேபோல் கண் அறுவை சிகிச்சைக்கு ரூ.10,450 முதல் ரூ.11,450, புற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.23,650, கண் அறுவை சிகிச்சை மற்றும் இம்பிளான்டுடன் சேர்த்து ரூ.23,650, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு ரூ.19,900 மற்றும் ரூ.24,650 கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கார்டியோதெரபிக் அறுவை சிக்சைக்கு ரூ.52,350 மற்றும் ரூ.62,350, நியூராலஜி சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரம், பொது அறுவை சிகிச்சைக்கு ரூ.11,400 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.