பொன்னேரியில் மீன்பிடிக்க சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்
ஜெயங்கொண்டம் அருகே பொன்னேரியில் மீன்பிடிக்க பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர்.
ஜெயங்கொண்டம்:
மீன்கள் பிடித்து சென்றனர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆமணக்கந்தோண்டி அருகே பொன்னேரி உள்ளது. இந்த ஏரி, ராஜேந்திர சோழனால் விவசாய பயன்பாட்டிற்காகவும், குடிநீர் பயன்பாட்டிற்காகவும் வெட்டப்பட்டது. தற்போது இந்த ஏரியில் இருந்த தண்ணீர் வற்றி ஆங்காங்கே சிறிய அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது.
குட்டைபோல் தேங்கி உள்ள தண்ணீரில் மீன்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இதையடுத்து மீன்களை பிடிப்பதற்காக அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் ஏரியில் குவிந்தனர். சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் மீன்களை பிடித்துச் சென்றனர்.
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் கிராமப்புறங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத காரணங்களினால் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.
மீன் பிடிப்பதாக கூறி அதிக அளவில் மக்கள் சமூக இடைவெளியின்றி ஒரே இடத்தில் கூடுவதால் நோய் தொற்று ஏற்படும் நிலை உருவாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.