குடிநீர் தேடி வந்த மான், நாய்கள் கடித்து சாவு

குடிநீர் தேடி வந்த மான், நாய்கள் கடித்ததில் செத்தது.

Update: 2021-06-20 21:03 GMT
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் சித்தளி காப்பு காடுகளில் மான்கள் அதிகளவில் உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வன விலங்குகள் தண்ணீரை தேடி அலைந்து திரிகின்றன. இந்நிலையில் நேற்று தண்ணீர் தேடி வேப்பூர் கிராம குடியிருப்பு பகுதிக்குள் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஒன்று புகுந்தது.
அதனை கண்ட தெரு நாய்கள், மானை விரட்டிச்சென்று கழுத்து மற்றும் முதுகு பகுதியில் கடித்தன. இதனால் பலவீனம் அடைந்த புள்ளிமான் வேறு எங்கும் செல்ல முடியாமல் தவித்தது. இதனை கண்ட பொதுமக்கள், நாய்களை விரட்டி அந்த மானை மீட்டு முதலுதவி அளித்தனர். இருப்பினும் அந்த மான் பரிதாபமாக செத்தது. இது பற்றி பொதுமக்கள், வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் சசிகுமார், வனவர் குமார், வன காப்பாளர் ராஜூ, பேரளி வனக்காவலர் சவுந்தர்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த புள்ளிமானின் உடலை கைப்பற்றினர். பின்னர் மானை பெரம்பலூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூறு பரிசோதனை செய்து சித்தளி வனகாப்பு காட்டு பகுதியில் புதைத்தனர்.  காப்புக்காடுகளில் வறட்சி காரணமாக தண்ணீர் தேடி வனவிலங்குகள் அருகில் உள்ள கிராமங்களுக்கு அடிக்கடி வரும் நிலை உள்ளது. குறிப்பாக தண்ணீர் தேடி வரும் மான்கள் வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்து குதறுவதாலும் உயிரிழக்கின்றன. இதை தவிடுக்கும் விதமாக காட்டுப்பகுதிகளில் கூடுதலாக தண்ணீர் தொட்டிகள் அமைத்து, தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்