டி.என்.பாளையம், அம்மாபேட்டை பகுதியில் மது கடத்திய 7 பேர் கைது
டி.என்.பாளையம், அம்மாபேட்டை பகுதியில் மது கடத்திய 7 பேரை போலீசாா் கைது செய்தனா்.
ஈரோடு
அந்தியூர் நேருவீதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பால்ராஜ் (வயது 41) என்பவரது தனது வீட்டில் 42 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக அவரை கைது செய்தனர். இதேபோல் அந்தியூர் போலீசார் ஜி.எஸ்.காலனி பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்ததாக குணசேகரன்(30) என்பவரை கைது செய்தனர்.
அம்மாபேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவி மூர்த்தி தலைமையிலான போலீசார் சின்னபள்ளம் சோதனைசாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சரக்கு வாகனத்தில் தர்மபுரியில் இருந்து 32 மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி (30), தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்த விவேக் (30) ஆகியோரை கைது செய்தனர்.
பங்களாப்புதூர் போலீசார் டி.என்.பாளையம் அருகே டி.ஜி.புதூர் நால்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 440 கர்நாடக மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக கொண்டையம்பாளையத்தை சேர்ந்த மாரசாமி (வயது 42), பச்சையப்பன் (24) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மது கடத்தியதாக கைது செய்யப்பட்ட 7 பேரிடம் இருந்தும் மொத்தம் 514 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.