குமரி விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்கிறார்கள்
மீன்பிடி தடை காலம் முடிந்த பிறகு கன்னியாகுமரி விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள்.
கன்னியாகுமரி:
மீன்பிடி தடை காலம் முடிந்த பிறகு கன்னியாகுமரி விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள்.
மீன் இனப்பெருக்க காலம்
மீன்களின் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகுகள் மீன் பிடிப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் மீன்பிடி தடை காலம் 2 கட்டமாக உள்ளது.
குமரி கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி, சின்னமுட்டம் பகுதிகளில் ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதியான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி போன்ற கடற்கரை கிராமங்களில் மே 31-ந்தேதி நள்ளிரவு முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் விசைப்படகுகள் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று செல்கிறார்கள்
அதன்படி குமரி கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது.
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடு்பட்டு வருகின்றன. மீன்பிடி தடை காலம் முடிந்த பிறகும் 21-ந்தேதி முதல் சின்னமுட்டம் துறை முகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்வது என்று முடிவு செய்த னர். அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்கிறார்கள். அதற்கான ஆயத்த பணிகளில் அதாவது விசைப்படகில் டீசல் நிரப்புவது மற்றும் ஐஸ்கட்டிகளை நிரப்பும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
இதுபற்றி சின்னமுட்டம் ஊர் தலைவர் சில்வஸ்டர் கூறியதாவது:-
சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து 21-ந்தேதி (இன்று) முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள். அதன்படி விசைப்படகுகள் ஒற்றை இலக்க பதிவு மற்றும் இரட்டை இலக்க பதிவு என இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது. முதல் நாளன்று ஒற்றை இலக்க பதிவு எண் கொண்ட 145 விசைப்படகுகளில் மீனவர்கள் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு செல்வார்கள். அவர்கள் இரவு 9 மணி அளவில் தான் கரைக்கு திரும்புவார்கள். 22-ந்தேதி இரட்டை இலக்க பதிவு எண் கொண்ட படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும். அவ்வாறு பிடித்து வரும் மீன்களை விற்கும் போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதை கடைப்பிடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.