தஞ்சையில் மீன் வாங்குவதற்காக குவிந்த மக்கள்
தஞ்சை கீழவாசல் பகுதியில் மீன் வாங்குவதற்காக மக்கள் சமூக இடைவெளியை மறந்து திரண்டனர். இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என மக்கள் அச்சம் அடைந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் பகுதியில் மீன் வாங்குவதற்காக மக்கள் சமூக இடைவெளியை மறந்து திரண்டனர். இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என மக்கள் அச்சம் அடைந்தனர்.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களில் ஒன்றாக தஞ்சை மாவட்டமும் விளங்கி வருகிறது. இதனால் தஞ்சை மாவட்டங்களில் தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தளர்வுகள் கட்டுப்பாடுகளுடன் அமலில் உள்ளது. இன்றும் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் 300 தாண்டி உள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், மருந்து கடைகள், இறைச்சி கடைகள் போன்றவை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதர வணிக நிறுவனங்கள், வர்த்தக கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. தேனீர் கடைகள் கூட திறக்க அனுமதிக்கப்படவில்லை.
மீன் வாங்க குவிந்த மக்கள்
மேலும் தஞ்சை மாவட்டத்தில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே சுற்றித் திரிபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீன்பிடி தடை காலம் முடிவடைந்து முதல் ஞாயிற்றுக்கிழமை நேற்று என்பதால் கடல் மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வரும் என்பதால் மீன் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
தஞ்சை கீழவாசலில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. கொரோனா தொற்று அதிகரித்து வந்ததையடுத்து இந்த மீன் மார்க்கெட் மூடப்பட்டு மீன் மொத்த வியாபாரம் தஞ்சை கரந்தையில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதன்படி தற்போது வரை அங்கு மீன் மொத்த விற்பனை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று அதிகாலை அங்கு மீன் மொத்த விற்பனை நடைபெற்றது.
சமூக இடைவெளியை மறந்தனர்
மீன் சில்லறை வியாபாரம் கீழவாசலில் மீன் மார்க்கெட் முன்புறம் உள்ள சாலையில் நடைபெற்றது. இந்த பகுதியில் வியாபாரிகள் தள்ளு வண்டிகளிலும் ஆங்காங்கே கடைகள் அமைத்தும் மீன் வியாபாரம் செய்தனர். இதனால் மீன் வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் திரண்டனர். இதனால் மீன் மார்க்கெட் பகுதியில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.பொதுமக்களும் சமூக இடைவெளியை மறந்து ஒரே இடத்தில் மீன்கள் வாங்குவதற்காக குவிந்ததால் கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என மக்கள் அச்சம் அடைந்தனர்.
மீன் வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் இருசக்கர வாகனங்களில் மக்கள் வந்ததால் சாலைகளில் அதிக அளவில் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. காலை முதல் 11 மணி வரை கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.