காந்தி மார்க்கெட் மீண்டும் செயல்பட தொடங்கியது

காந்தி மார்க்கெட் மீண்டும் செயல்பட தொடங்கியது. சில்லரை வியாபாரத்திற்கு அனுமதி இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-20 18:14 GMT

திருச்சி, 
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக திருச்சி மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மே மாதம் மூடப்பட்டது. காந்தி மார்க்கெட்டில் நடைபெற்றுவந்த மொத்தம் மற்றும் சில்லரை காய்கறி வியாபாரங்கள் முறையை மேலப்புலிவார்டு ரோடு, பாலக்கரை பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியதையடுத்து காந்தி மார்க்கெட்டை திறப்பதற்கு மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் நேற்று முன்தினம் காந்தி மார்க்கெட்டை திறந்து சுத்தப்படுத்தும் பணி மாநகராட்சி பணியாளர்களால் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இரவு காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் தொடங்கியது.வெளியூர்களில் இருந்து வந்த இங்கிலீஷ் காய்கறிகள் தேங்காய் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் லாரிகளில் இருந்து இறக்கப்பட்டன. இரவு 10 மணிக்கு மேல் காந்தி மார்க்கெட்டில் முழு அளவில் மொத்த வியாபாரம் நடைபெற்றது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அதிகாலை 4 மணிக்கு காந்திமார்க்கெட் மூடப்படும் சில்லரை வியாபாரம் செய்வதற்கு அனுமதி இல்லை என கூறியதால் வியாபாரிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் கமலக்கண்ணன் கூறுகையில் 'காந்தி மார்க்கெட்டின் 10 கேட்களையும் திறந்துவிட வேண்டும்.அப்படி திறந்தால் தான் போக்குவரத்து நெருக்கடி இன்றி மக்கள் எளிதாக பொருட்களை வாங்கி செல்ல முடியும். சில்லறை வியாபாரத்திற்கு அனுமதி இல்லை என்றால் நாங்கள் எங்கே சென்று வியாபாரம் செய்வது என்பதை மாவட்ட நிர்வாகம் விளக்க வேண்டும் இல்லையென்றால். நாங்கள் ரோட்டிற்கு வந்து போராட்டம் நடத்துவோம்'என்றார்.

மேலும் செய்திகள்