கொரோனா ஊரடங்கால் பம்பை, உடுக்கை, சிலம்பம், தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
கொரோனா ஊரடங்கால் பம்பை, உடுக்கை, சிலம்பம், தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
கொரோனா நோய் தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக கோவில் திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள், தெருக்கூத்து உள்ளிட்டவை நடைபெறாததால் பம்பை, உடுக்கை, சிலம்பம் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 5 ஆயிரம் குடும்பங்களுக்கு மேலானவர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர்.
இந்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பம்பை, உடுக்கை, சிலம்பம் மற்றும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள சபரிகிரீசன் அய்யப்ப பக்தர்கள் குழு மற்றும் அமெரிக்காவாழ் தமிழ் இளைஞர்கள் குழு இணைந்து குருசாமிகள் பாலு, மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நிவாரண பொருட்களாக அரிசி, காய்கறிகள் மற்றும் முக கவசங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. அப்போது விழுப்புரம் அங்காளபரமேஸ்வரி பம்பை, உடுக்கை, சிலம்ப கலைஞர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டவர்கள் பம்பை, உடுக்கை, கரகாட்டம், மேளதாள, நாதஸ்வர இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து மாவட்ட தலைவர் பாலு, செயலாளர் தண்டபாணி ஆகியோர் தலைமையில் இசைக்கருவிகளை வாசித்தும், கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்டவைகளை நடனமாடியவாறும் வந்தனர். அதன் பின்னர் அவர்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக கோவில் திருவிழாக்கள் நடைபெறாமல் எங்களுடைய வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக மற்றவர்களுக்கு வழங்குவது போல எங்களைப் போன்ற கலைஞர்களுக்கும் நிவாரண உதவி தொகைகளை வழங்கிட வேண்டும். மேலும் ஆடி மாதத்திற்குள்ளாக கோவில்களை திறந்து எங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் திருவிழாக்கள் நடை பெறுவதற்கான அனுமதியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.