கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் உலா வந்த கரடி
கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் கரடி உலா வந்தது.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள அரவேனு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளதால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதனால் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் சாதாரணமாக உலா வருகின்றன. இந்த நிலையில் அரவேனுவில் இருந்து அளக்கரை செல்லும் சாலையில் புதூர் கிராமம் உள்ளது.
இங்கு குடியிருப்புகளுக்கு அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் நேற்று மதியம் கரடி ஒன்று உலா வந்தது. இதுகுறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் தேயிலை தோட்டத்தில் சிறிது நேரம் சுற்றித்திரிந்த கரடி, வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.