பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் முறைகேடு புகார் சேகர் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு

பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் முறைகேடு புகார் சேகர் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு

Update: 2021-06-19 23:08 GMT
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசியை போட ஆர்வம் காட்டி நீண்ட வரிசையில் நிற்பதை காணமுடிகிறது. இந்தநிலையில் பரமத்திவேலூர் பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் வசிக்கும் வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கொேரானா தடுப்பூசி முகாம் அமைக்காமல் நல்லூர், கபிலர்மலை, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் முகாம் அமைத்து தடுப்பூசி போடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் காலை 5 மணி முதல் டோக்கன் பெற்றால் மட்டுமே தடுப்பூசி போட முடியும் என்பதால் காலை முதல் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்று வருகின்றனர். 
ஆனால் டோக்கன் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், போதிய டோக்கன்களை வழங்காததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் செல்வதாகவும் பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகருக்கு புகார்கள் சென்றது. அதன்பேரில் நேற்று பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற சேகர் எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு முறையாக டோக்கன்கள் வினியோகம் செய்து தடுப்பூசிகள் போடப்படுகிறதா? என பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். 
இதனையடுத்து பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட 200 தடுப்பூசிகளில் காலை முதலே நீண்ட வரிசையில் நின்ற 140 பேருக்கு போடப்பட்டது. மீதம் உள்ள 60 தடுப்பூசிகள் சிறப்பு ஒதுக்கீடாக முன்களப்பணியாளர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒதுக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. 
இதுகுறித்து சேகர் எம்.எல்.ஏ. கூறுகையில், இனிவரும் காலங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் அந்தந்த பகுதிகளில் முகாம் அமைத்து தடுப்பூசி போடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடு இல்லாமல் அனைத்து பொதுமக்களுக்கும் முறையாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
=======

மேலும் செய்திகள்