சேலம் மாவட்டத்தில் 11 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை
சேலம் மாவட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 7 ஆயிரத்து 876 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 7 ஆயிரத்து 876 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா பரிசோதனை
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தினமும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை 11 லட்சத்து 7 ஆயிரத்து 876 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் 82 ஆயிரத்து 764 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இவர்களில் 72 ஆயிரத்து 224 பேர் ஆஸ்பத்திரிகள் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 5 ஆயிரத்து 196 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
77 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
கொரோனாவுக்கு மாவட்டத்தில் உயிரிழப்புகள் தினமும் ஏற்பட்டு வருகின்றன. இதுவரை 1,260 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவு இருக்கும் போது 180-க்கும் மேற்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்தன. ஆனால் தற்போது பாதிப்பின் அளவு குறைந்து வருவதால் 77 இடங்கள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த இடங்களில் உள்ள 1,260 வீடுகளில் வசித்து வரும் 4 ஆயிரத்து 448 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.