கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு ஜூலை மாதம் நடக்கிறது
கர்நாடகத்தில் ஜூலை மாதம் 3-வது வாரத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 நாட்கள் நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக 10 லட்சம் முகக்கவசங்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் ஜூலை மாதம் 3-வது வாரத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 நாட்கள் நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக 10 லட்சம் முகக்கவசங்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 3-வது வாரம் தேர்வு
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பி.யூ.சி. 2-வது ஆண்டுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவித்திருந்தார். இதையடுத்து, பொதுத்தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அடுத்த மாதம் (ஜூலை) 3-வது வாரத்தில் நடத்துவதற்கு கல்வித்துறை தீர்மானித்துள்ளது. இந்த தேர்வு 2 நாட்கள் மட்டுமே நடைபெறும். காலை 10.30 மணியில் இருந்து 1.30 மணிவரை தேர்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே அறிவித்தபடி 120 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
10 லட்சம் முகக்கவசங்கள்
இந்த தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறாவிட்டாலும், தேர்ச்சி பெற்றதாகவே அறிவிக்கப்பட உள்ளனர். இதன் காரணமாக மறு கூட்டலுக்கோ, மறு தேர்வு எழுதவோ அனுமதி அளிக்கப்படாது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என ஒட்டு மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 595 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்க கல்வித்துறை ஆயத்தமாக வருகிறது.
ஒரு தேர்வு அறையில் 12 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில், தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பிற ஊழியர்கள் என ஒட்டு மொத்தமாக 10 லட்சம் முகக்கவசங்கள் வாங்குவதற்கு கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.