மாயமான புதுமாப்பிள்ளை கால்வாயில் பிணமாக மீட்பு

அஞ்சுகிராமம் அருகே திருமணமான 6 மாதத்தில் மாயமான புதுமாப்பிள்ளை கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2021-06-19 20:13 GMT
அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமம் அருகே திருமணமான 6 மாதத்தில் மாயமான புதுமாப்பிள்ளை கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார்.
தேங்காய் வெட்டும் தொழிலாளி
அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் மருங்கூர் அருகே குமாரபுரம் தோப்பூர் ஸ்ரீ கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது28), தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவி பெயர் வளர்மதி (19). முத்துக்குமார் தினசரி காலை வேலைக்கு சென்றுவிட்டு மாலை 6 மணிக்குள் வீடு திரும்புவது வழக்கம். 
இந்தநிலையில், கடந்த 17-ந் தேதி காலையில் வேலைக்கு சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.       இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை தேடி வந்தனர்.
பிணமாக மீட்பு
இந்த நிலையில் நேற்று காலை மருங்கூர் அருகே ராமநாதன்புதூர் ஊரிலுள்ள  கால்வாயில் தண்ணீரில் முத்துக்குமார் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸி மேனகா சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் முத்துக்குமார் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்த சம்பவம் மருங்கூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்