ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் விவகாரம்: ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரிக்க சித்தராமையா வலியுறுத்தல்

நீர்ப்பாசன திட்டத்தில் ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் குறித்து ஊழல் தடுப்பு படை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-06-19 20:04 GMT
சித்தராமையா.
பெங்களூரு: நீர்ப்பாசன திட்டத்தில் ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் குறித்து ஊழல் தடுப்பு படை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.

பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போதுகூறியதாவது:-

ஊழல் தடுப்பு படை விசாரணை

பத்ரா மேல்அணை திட்டத்திற்காக ரூ.20 ஆயிரம் கோடிக்கான டெண்டரில் ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இந்த ஊழல் முறைகேட்டில் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஈடுபட்டு இருப்பதாகவும், அவர்களது கட்சியை சேர்ந்த எச்.விஸ்வநாத் எம்.எல்.சி.யே தெரிவித்துள்ளார். இந்த ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் குறித்து உடனடியாக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்த முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட வேண்டு்ம்.

இந்த விவகாரம் 2 காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முதற்காரணம் இந்த ஊழல் குற்றச்சாட்டு நேரடியாக முதல்-மந்திரியின் மகன் மீது கூறப்படுகிறது. 2-வது முக்கிய காரணம் நீர்ப்பாசன திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜனதா கட்சியை சேர்ந்த எச்.விஸ்வநாத்தே கூறி இருக்கிறார். இதன் காரணமாக தான் ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் குறித்து உடனடியாக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை இல்லை

பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்காக தொடங்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்க தேவையான படுக்கைகள், பிற உபகரணங்கள் வாங்கியதிலும் முறைகேடு நடந்திருப்பதாக எச்.விஸ்வநாத் கூறி இருக்கிறார். அதனால் இந்த முறைகேடு குறித்தும் அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கர்நாடக நீர்ப்பாசன திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா, அவரது மகன் மீது எச்.விஸ்வநாத் மட்டும் குற்றச்சாட்டு கூறவில்லை.

ஏற்கனவே பசனகவுடா பட்டீல் எம்.எல்.ஏ.வும், முதல்-மந்திரியும், அவரது மகனும் ஊழலில் ஈடுபட்டு வருவதாக பல முறை குற்றச்சாட்டு கூறியுள்ளார். முதல்-மந்திரி மீது குற்றச்சாட்டு கூறியும் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது பா.ஜனதா எந்த விதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பல சந்தேகங்களை ஏற்படுத்தி இருப்பதுடன், ஊழல் நடந்திருப்பது உறுதியாகி இருக்கிறது. எனவே ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் முறைகேடு குறித்து ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்