பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
திருவேங்கடம் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே உள்ள குளக்கட்டாக்குறிச்சி நடுத்தெருவைச் சேர்ந்தவர் கண்ணபிரான். இவருடைய மனைவி செல்வராணி (வயது 28). இவர் காலையில் தனது வீட்டில் உள்ள குப்பைகளை அள்ளிக்கொண்டு, ஊருக்கு வடக்கே குளக்கரையின் அருகில் உள்ள குப்பைக்கிடங்கில் போட சென்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், செல்வராணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்ட செல்வராணி, நகையை இறுக பிடித்துக் கொண்டு, ‘திருடன்... திருடன்...’ என்று கூச்சலிட்டார். இதனால் மர்மநபர் நகை பறிக்கும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இந்த சம்பவத்தின்போது செல்வராணியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.