திசையன்விளை அருகே வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரம்

திசையன்விளை அருகே வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-06-19 18:22 GMT
திசையன்விளை:
ஆண்டுதோறும் தாமிரபரணி ஆற்றில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை வறண்ட பகுதிகளான திசையன்விளை, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில், தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது.
அதன்படி அம்பை அருகே வெள்ளாங்குளி கன்னடியன் கால்வாயில் இருந்து சேரன்மாதேவி, மூலைக்கரைப்பட்டி, காரியாண்டி வழியாக திசையன்விளை அருகே எம்.எல்.தேரி வரையிலும் புதிதாக கால்வாய் அமைக்கும் பணி 4 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இதில் 3 கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் பொன்னாக்குடி அருகே நாற்கரசாலை மற்றும் ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற வேண்டி உள்ளது. தற்போது 4-வது கட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதான வெள்ளநீர் கால்வாயில் இருந்து சுற்று வட்டார பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையிலும் கிளை கால்வாய்களும் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி விஜயநாராயணத்தில் இருந்து 15.7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திசையன்விளையை அடுத்த நாடார் அச்சம்பாட்டுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், 12 அடி அகலத்தில் புதிய கால்வாய் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

நாடார் அச்சம்பாட்டில் தண்ணீரை சேமிக்கும் வகையில், அங்கு சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் புதிய குளம் அமைக்கப்படுகிறது. புதிதாக அமைக்கப்படும் கால்வாயின் குறுக்கே பாலங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் விஜயநாராயணம், குமாரபுரம், முதுமொத்தன்மொழி, திசையன்விளை, ஆனைகுடி, ஆயன்குளம் படுகைகள் உள்ளிட்ட ஏராளமான குளங்கள் பாசன வசதி பெறும். எனவே மழைக்காலத்துக்கு முன்பாக வெள்ளநீர் கால்வாய் பணிகளையும், நாடார் அச்சம்பாட்டில் புதிய குளம் அமைக்கும் பணிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்