தாமிரபரணி ஆற்றில் கிடந்த நந்தி- பெண் சிலைகள் மீட்பு
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் கிடந்த நந்தி, பெண் சிலகைள் மீட்கப்பட்டன.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் கிடந்த நந்தி மற்றும் பெண் சிலைகள் மீட்கப்பட்டன.
ஆற்றில் மீன்பிடிக்க சென்றபோது...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே முத்தாலங்குறிச்சி பூந்தலையுடையார் சாஸ்தா கோவில் அருகில் தாமிரபரணி ஆற்றில் அப்பகுதியைச் சேர்ந்த வள்ளிநாதன் என்பவர் மீன்பிடிக்க சென்றார். அப்போது ஆற்றில் நந்தி சிலை கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே, தாசில்தார் கோபாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் கந்தசுப்பு மற்றும் அதிகாரிகள் ஆற்றங்கரைக்கு சென்று பார்வையிட்டனர்.
நந்தி-பெண் சிலை மீட்பு
அங்கு தாமிரபரணி ஆற்றில் கிடந்த சுமார் ஒரு டன் எடையிலான கல் சிலையை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அந்த சிலையின் காது பகுதியின் அருகில் சேதமடைந்து இருந்தது. மேலும் ஆற்றில் சுமார் 60 கிலோ எடையிலான பெண் வடிவ கல் சிலையும் கண்டெடுக்கப்பட்டது.
மீட்கப்பட்ட சிலைகளை மினி லாரியில் ஏற்றி, ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தாசில்தார் கூறுகையில், ‘மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெற்று, மீட்கப்பட்ட சிலைகள் நெல்லை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும்’ என்றார்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு...
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘தாமிரபரணி ஆற்றில் முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் முத்தாலங்குறிச்சியில் ஆற்றங்கரையில் உள்ள கோவிலின் சிலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம். மீட்கப்பட்ட பெண் வடிவ சிலை சப்த கன்னியர் சிலை போன்று உள்ளது.
இதேபோன்று முத்தாலங்குறிச்சியில் முன்பு உறைகிணறு அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது கிடைத்த நந்தி சிலை சேதமடைந்து இருந்ததால் அதனை ஆற்றில் வீசியுள்ளனர். எனவே, அந்த நந்திசிலைதான் தற்போது கிடைத்துள்ளது’ என்றனர்.