பில்லூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

பில்லூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.

Update: 2021-06-19 16:51 GMT
மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பில்லூர் அணை அமைந்துள்ளது.  இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மற்றும் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக கடந்த 17-ந் தேதி அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரிக்க தொடங்கியது. இதனால் அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இதனைத்தொடர்ந்து 100 அடி கொள்ளளவு உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. இதையடுத்து அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் மழையளவு குறைந்ததால் அணைக்கு படிப்படியாக நீர்வரத்து குறைந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடி வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 93.5 அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் குறைந்ததால் 4 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.

மாலை 5 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 92 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.

மேலும் செய்திகள்