பல்வேறு புகாரில் சிக்கிய 12 போலீசார் இடமாற்றம்
பல்வேறு புகாரில் சிக்கிய 12 போலீசாரை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாண்டியன் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும், விழுப்புரம் நகர போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர் கடலூர் மாவட்டத்திற்கும், நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் கடலூர் மாவட்டத்திற்கும், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஏட்டுகள் அதிரடி மாற்றம்
விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் ஏட்டு கண்ணன், விழுப்புரம் மேற்கு போலீஸ் ஏட்டுகள் தேவநாதன், குகநாதன், கண்டமங்கலம் ஏட்டு நீலமேகம் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும், காணை ஏட்டு ரியாஸ்முகமது, செஞ்சி ஏட்டு சக்திகுமரன், கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடி ஏட்டு நடராஜன், விழுப்புரம் ஆயுதப்படை போலீஸ்காரர் கோவிந்தராஜ் ஆகியோர் கடலூர் மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் பிறப்பித்துள்ளார். இவர்கள் 12 பேரும் சில புகார்களில் சிக்கிய காரணத்திற்காக விழுப்புரத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.