கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளி மாணவி திடீர் மாயம்
கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளி மாணவி திடீர் மாயம்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டைைய அடுத்த ஏலகிரி கிராமம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 14 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி, கடந்த 18-ந்தேதி மதியம் 12 மணியளவில் வீட்டில் இருந்து வெளியில் புறப்பட்டு சென்றவா், பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் திடீரென எங்கேயோ மாயமாகி விட்டார். அவரை, பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை.
மாணவி தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வீட்டில் வைத்திருந்தார். அதை கைப்பற்றிய பெற்றோர் படித்துப் பார்த்தனர். அதில், ‘என்னை தேட வேண்டாம்’ எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மாணவி மாயமானது தொடர்பாக நாட்டறம்பள்ளி அருகில் உள்ள ஜெயபுரம் பாம்பாண்டி வட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பெருமாள் மீது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தனது மகளை மீட்டுத் தருமாறு தாயார் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.