சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள்

கூடலூரில் சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

Update: 2021-06-19 14:14 GMT
கூடலூர்

கூடலூரில் சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

மருத்துவ கழிவுகள்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் மருத்துவ உபகரணங்கள் பயன்பாடும் அதிகமாக இருந்தது. 

இதற்கிடையில் கூடலூர் பகுதியில் சாலையோரங்களில் அவ்வபோது மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதிருப்தி

இந்த நிலையில் கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் சாலையில் மாக்கமூலா என்ற இடத்தில் சாலையோரம் மருந்து பாட்டில்கள் மற்றும் ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. 

இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் காணப்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து நகராட்சி சுகாதார துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விசாரணை

அதன்பேரில் சுகாதார பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது குறித்து விசாரணை நடத்தினர். 

ஆனால் கழிவுகளை கொட்டியவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் மருத்துவ கழிவுகளை சுகாதார பணியாளர்கள் அங்கிருந்து எடுத்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தொடர்ந்து கண்காணிக்க பரிந்துரை

இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் கூறியதாவது:- மருத்துவ கழிவுகளை பொது இடங்களில் கொட்டக்கூடாது என சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே தற்போது சாலையோரம் வீசப்பட்ட மருத்துவ கழிவுகள் தனிநபர்கள் பயன்படுத்தியது என தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்