விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் - கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டி
விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிய கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டம் வேளாண்மை சார்ந்த மாவட்டமாக இருப்பதால் விவசாயிகளின் நலனுக்கும், அவர்களது முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகளவில் பிரச்சினையை விவசாயிகள் சந்திப்பதாக பல தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தீர்வு காணப்படும்.
விவசாயிகள் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விட்டு காத்திருக்காத வகையில் உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பருவத்தில் 9 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் முப்போகமும், ஒரு சில இடங்களில் 2 போகமும், சில பகுதிகளில் ஒரு போகமும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. உளுந்து, எள், கடலை போன்ற மானாவாரி பயிர்கள் சாகுபடி குறைந்து வருவதை அதிகப்படுத்தும் வகையில் ஒரு போகம், 2 போகம் சாகுபடி நடைபெறும் இடங்களில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மானாவாரி பயிர்கள் சாகுபடியால் மண்வளம் பெருகும். விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் வகையில் வேளாண்மை துறை மேம்படுத்தப்படும். உரம் போன்ற இடுப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடைமடை வரை தட்டுப்பாடின்றி தண்ணீர் செல்வது குறித்து ஆய்வு செய்யப்படும். கிளை வாய்க்கால்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு நிலுவை தொகை தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஏரி, குளங்களில் மண் அள்ளும் போது உயிர்பலி ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், பள்ளமாக இல்லாமல் சமச்சீராக மண் எடுக்க அறிவுறுத்தப்படும். மணல் கொள்ளை தடுக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று முழுமையாக குறைய மக்களிடம் சுயகட்டுபாடு இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். தஞ்சை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 9 சதவீதமாக குறைந்துள்ளது. இறப்பு விகிதமும் 1.1 சதவீதமாக குறைந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி என்ற திட்டம் செயல்படுத்தப்படும். சுகாதார மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழகஅரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டு செல்வது எனது முக்கிய பணியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.