வேலூரில் பெண்ணிடம் முகவரி கேட்பது போன்று 4 பவுன் சங்கிலி பறிப்பு
வீட்டு வாசலில் நின்றிருந்த பெண்ணிடம் முகவரி கேட்பது போன்று 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேலூர்
சங்கிலி பறிப்பு
வேலூர் அலமேலுமங்காபுரம் சமாதானநகரை சேர்ந்தவர் வஜ்ரம். இவரது மனைவி ஜோதி (வயது 55). இவர் நேற்று முன்தினம் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் ஜோதியின் அருகில் வந்து முகவரி கேட்பது போல் பேச்சுக்கொடுத்தனர். ஜோதி அவர்களிடம் முகவரி குறித்து தெரிவித்தார்.
அப்போது திடீரென அந்த வாலிபர்கள் ஜோதியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை திடீரென பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதி திருடன்...திருடன்... என கூச்சலிட்டார். எனினும் அந்த வாலிபர்கள் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர்.
வலைவீச்சு
இதுகுறித்து வேலூர் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஜோதியின் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.