நாகை காடம்பாடியில் உள்ள பழைய உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் தீவிபத்து

நாகை காடம்பாடியில் உள்ள பழைய உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் கோப்புகள் மற்றும் மின்சார பொருட்கள் எரிந்து நாசமானது.

Update: 2021-06-19 11:29 GMT
நாகப்பட்டினம்,

நாகை காடம்பாடியில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனைக்கு எதிரில் வெளிப்பாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகம் கடந்த 20 ஆண்டு காலமாக இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் நாகை வெளிப்பாளையம், காடம்பாடி, மணிக்கூண்டு, நல்லியான் தோட்டம், பால்பண்ணைச்சேரி, தெத்தி, வ.உ.சி. தெரு, தாமரைக்குளம், மருந்துகொத்தளதெரு, நம்பியார் நகர் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட மின்சார்ந்த பணிகளை இந்த அலுவலகம் மூலம் இயக்குதலும், பராமரித்தல் பணிகள் மற்றும் மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.

இந்த அலுவலகம் இயங்கி வந்த கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டதால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இங்கிருந்து நாகை நெய்தல் நகர் அருகே மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் வெளிப்பாளையத்தில் உள்ள பழைய அலுவலகத்தில் பழைய கோப்புகள், மின்கலன்கள், மின்மாற்றிகள் உள்ளிட்ட மின்சார பொருட்கள் இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் பழைய உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து திடீரென புகை வந்தது. இதை பார்த்தவுடன் அங்கிருந்தவர்கள் நாகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அலுவலகத்தில் இருந்த கோப்புகள், மின்கலன்கள் மற்றும் மின்மாற்றிகள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

பின்னர் 11.30 மணி அளவில் மீண்டும் தீப்பிடித்து எரிந்தது. இதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள் தீயை அணைத்தனர். உதவி மின்பொறியாளர் அலுவலகம் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் சேத மதிப்பீடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்