நாடு முழுவதும் ஒரே பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கோரி கருப்பு பட்டை அணிந்து டாக்டர்கள் போராட்டம்
நாடு முழுவதும் ஒரே பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கோரி டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி,
நாடு முழுவதும் ஒரே பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கோரி டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்பு பட்டை அணிந்து போராட்டம்
இந்தியாவில் பல மாநிலங்களில் அடிக்கடி மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பெண்களும் தாக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சட்டத்தைபோல மத்திய அரசும் சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தின் தலைமை ஜூன் 18-ஐ (நேற்று) தேசிய எதிர்ப்பு தினமாக ‘காப்போரை காப்பீர்' என்ற அடைமொழி மூலம் அறிவித்துள்ளது.
அதை ஏற்று இந்திய மருத்துவ சங்கத்தின் திருச்சி கிளை சார்பில் நேற்று காலை டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆஸ்பத்திரிகளுக்கு பாதுகாப்பை பிரகடனப்படுத்தக்கோரி தேசிய எதிர்ப்பு தினம் கடைப்பிடித்தனர். திருச்சி தில்லைநகரில் உள்ள இந்திய மருத்துவ சங்க வளாகத்தில் கருப்பு பட்டை அணிந்து நடந்த எதிர்ப்பு தின கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
மருத்துவ சேவை நிறுத்தம் இல்லை
திருச்சி கிளை தலைவர் டாக்டர் கண்ணம்மை மனோகரன், செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாநில தலைவர்கள் டாக்டர் அசோக், குணசேகரன் மற்றும் டாக்டர் சேதுராமன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது வாசகம் அடங்கிய கோரிக்கை பதாகைகளையும் கையில் ஏந்தி நின்றனர்.
போராட்டம் குறித்து மாநில தலைவர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நிலையான, உறுதியான பாதுகாப்பு வேண்டும். மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குபவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும். எங்களது போராட்டத்தால் எந்த மருத்துவ சேவையும் நிறுத்தப்பட வில்லை' என்றார்.