ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது

ஊட்டியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர்.

Update: 2021-06-18 23:00 GMT
ஊட்டி

ஊட்டியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர்.

100-ஜ கடந்தது

இந்தியாவில் சில நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  
இந்த நிலையில் மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது. நேற்று முன்தினம் 99 ரூபாய் 94 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று 23 பைசா உயர்ந்து ரூ.100-ஐ கடந்தது.

ஊட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 100 ரூபாய் 17 பைசாவுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது.

டீசல் விலை

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 35 பைசாவுக்கும், 6 மாதங்களுக்கு முன்பு ரூ.86-க்கும், ஒரு ஆண்டுக்கு முன்பு 77 ரூபாய் 83 பைசாவுக்கும் விற்பனையானது. கடந்த ஓராண்டை ஒப்பிடும் போது ஊட்டியில் பெட்ரோல் லிட்டருக்கு 22 ரூபாய் 34 பைசா அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

 ஸ்பீடு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.103 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.94-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கட்டுக்குள் கொண்டு வர...

கோவையில் இருந்து லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் ஊட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. அடிப்படை தேவைகளுக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் எரிபொருள் இன்றியமையாதது. அதன் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சமவெளி பகுதிகளில் இருந்து நீலகிரிக்கு வர லாரிகள் போன்ற சரக்கு வாகனங்களின் வாடகை கட்டணம் அதிகரித்து உள்ளது. மேலும் சமையல் கியாஸ் சிலிண்டர், சமவெளி பகுதி காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலை மேலும் உயரும் அபாயம் இருக்கிறது.

 இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

மேலும் செய்திகள்