சேலத்தில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
சேலத்தில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலத்தில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
ஆஸ்பத்திரிகளில் பணியின் போது டாக்டர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், மருத்துவத்துறை பணியாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வலியுறுத்தியும் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிட வளாகத்தில் நேற்று டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு அகில இந்திய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரகாசம் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலமுருகன், செயலாளர் ராஜேஸ் செங்கோடன், பொருளாளர் குமார் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் அவர்கள் கோரிக்கை வாசகங்கள் எழுதிய அட்டைகளை கையில் வைத்திருந்தனர்.
வேலைநிறுத்தம்
இதுகுறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரகாசம் கூறும் போது, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் டாக்டர்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவங்களை முற்றிலும் தடுத்து நிறுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கொரோனா காலம் என்பதால் வேலைநிறுத்த போராட்டத்தை கையில் எடுக்கவில்லை. எனவே மத்திய அரசு உடனடியாக மருத்துவத்துறை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்றார்.