ஈரோட்டில் பள்ளிக்கூடங்களுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கியது

ஈரோட்டில் பள்ளிக்கூடங்களுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கியது.

Update: 2021-06-18 21:45 GMT
ஈரோடு
தமிழகத்தில் 2021-2022 கல்வி ஆண்டு இந்த மாதம் தொடங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள 27 மாவட்டங்களில் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அடுத்த வாரம் முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு பள்ளிக்கூடங்களுக்கு தமிழக அரசின் பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.
ஈரோடு காவிரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து இந்த புத்தகங்கள் ஈரோடு மாநகராட்சி மற்றும் ஒன்றியத்துக்கு உள்பட்ட தொடக்கப்பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வட்டார கல்வி அதிகாரிகள் ராஜலட்சுமி, கோபால் ஆகியோர் முன்னிலையில் பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்தது. ஒரே லாரியில் அனைத்து புத்தகங்களும் ஏற்றப்பட்டு அந்தந்த பள்ளிக்கூடங்களின் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இதுபற்றி வட்டார கல்வி அதிகாரி ராஜலட்சுமி கூறும்போது, ஈரோடு வட்டாரத்துக்கு உள்பட்ட 98 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கூடங்களுக்கும் புத்தகங்கள் வினியோகிக்கப்படுகிறது. புத்தகம் வினியோகம் தொடர்பாக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சரிபார்த்து புத்தகங்களை பெற்றுக்கொள்வார்கள். இந்த பணி நாளையும் (அதாவது இன்றும்) நடக்கிறது என்றார்.

மேலும் செய்திகள்