என் மீதான ஊழல் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது; எடியூரப்பா பேட்டி
என் மீதான நீர்ப்பாசன திட்ட ஊழல் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு: என் மீதான நீர்ப்பாசன திட்ட ஊழல் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஒற்றுமையாக செயல்படுவேன்
கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. விவசாயிகள் விதைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதனால் விவசாயிகளுக்கு விதைகள், உரம் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மராட்டிய நீர்ப்பாசனத்துறை மந்திரி கர்நாடகம் வருகிறார். அவருடன் பருவமழை தொடர்பாக விவாதிக்க உள்ளேன். வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்களுடன் பேசி உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். பெலகாவி மாவட்ட கலெக்டருடன் பேசினேன். எங்கள் கட்சியில் எனக்கு எதிராக பேசும் ஒரு சிலர் தொடக்கத்தில் இருந்தே இருக்கிறார்கள். எனக்கு எதிராக பேசுபவர்களையும் அழைத்து பேசி ஒற்றுமையாக செயல்படுவேன்.
அடிப்படை ஆதாரமற்றது
எனக்கு எதிராக செயல்பட்ட சில எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் சந்திக்கவே அனுமதிக்கவில்லை. இது அனைவருக்கும் தெரியும். எனக்கு எதிராக சில புகார்களை கூறியுள்ள எச்.விஸ்வநாத் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எங்கள் கட்சி மேலிடம் முடிவு செய்யும். அவரை பற்றி பேச நான் விரும்பவில்லை. அதனால் எங்கள் கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக செயல்பட்டு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோம்.
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஏற்கனவே தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை தளர்த்துவது குறித்து நாளை (அதாவது இன்று) மாலை முடிவு செய்யப்படும். என் மீதான நீர்ப்பாசன திட்ட ஊழல் புகார் அடிப்படை ஆதாரமற்றது. இதுகுறித்து நீர்ப்பாசனத்துறை செயலாளர், விளக்கமான தகவல்களை வழங்குவார். அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது ஊழல் புகாரை எச்.விஸ்வநாத் கூறியுள்ளார்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.