தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மோதல்; 6 பேருக்கு அரிவாள் வெட்டு

திருச்சுழி அருகே தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2021-06-18 19:28 GMT
காரியாபட்டி, 
திருச்சுழி அருகே தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
முன்விரோதம் 
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சேர்ந்தது அம்மன்பட்டி கிராமம். அந்த ஊரில் தி.மு.க.வை சேர்ந்த பூச்சி என்ற ரவிகாந்த் (வயது 48) தரப்பை சேர்ந்தவர்களுக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா முத்துப்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான முத்து இருளாண்டி (52) தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் மற்றும் மின்சாரம் எடுப்பது சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
அரிவாள் வெட்டு 
இந்தநிலையில் இரு தரப்பினருக்கும் இடையே நேற்று முத்துப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். 
இந்த மோதலில் முத்துப்பட்டி கிராமத்தினரான அ.தி.மு.க.வை சேர்ந்த முத்து இருளாண்டி (52), அவரது மகன் முத்துராமலிங்கம் (24), கண்ணன் (24) ஆகிய 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இவர்கள் கமுதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 
இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த முத்துராமலிங்கம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 
போலீஸ் பாதுகாப்பு 
மேலும் அம்மன்பட்டி கிராமத்தை சேர்ந்த தி.மு.க.வை சேர்ந்த பூச்சி என்ற ரவிகாந்த், மருது (30), ரவி (44) ஆகிய 3 பேருக்கும் அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இவர்கள் 3 பேரும் திருச்சுழி அரசு மருத்துவமனையில் ேசர்க்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோதலில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்தவர்களின் கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இநத சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்