திருப்பத்தூர் அருகே டீக்கடைக்காரர் மர்மச்சாவு. சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்
திருப்பத்தூர் அருகே டீக்கடைக்காரர் மர்மமான முறையில் இறந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார் கொடுத்துள்ளார்.
ஜோலார்பேட்டை
மர்மச்சாவு
திருப்பத்தூரை அடுத்த புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜி (வயது 41). திருப்பத்தூர் பகுதியில் தனியார் கல்லூரி எதிரில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு அகிலா என்ற மனைவியும், தருணிஸ் (9) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் திருப்பத்தூர் அருகே கல்லாத்தூர் பகுதியில் புதிய வீடு கட்டிக் கொண்டிருக்கின்றனர். தினமும் இரவில் அங்கு தங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வராஜி தனது மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் பகுதிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை நேற்று காலை கருப்பனூர் கூட்ரோடு அருகே சாலையோரம் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் செல்வராஜி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்
இதுகுறித்து அவரது மனைவி அகிலா, தனது கணவரின் நண்பர்களிடம் விசாரித்துள்ளார். அதற்கு அவர்கள் இரவில் நாங்கள் மூன்று பேரும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டோம். செல்வராஜி வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார் என கூறி உள்ளனர்.
அதைத்தொடர்ந்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் அகிலா புகார் செய்தார். அதில் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.