அ.தி.மு.க.வில் சசிகலாவை அனுமதிக்க கூடாது; தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

அ.தி.மு.க.வில் சசிகலாவை அனுமதிக்க கூடாது என்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2021-06-18 17:34 GMT
கயத்தாறு:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கடம்பூரில் நேற்று மாலை  நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நடந்து முடிந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் கழக வெற்றியை அழிக்கவும், கழகத்தை கபளீகரம் செய்யவும், 18 சட்டமன்ற உறுப்பினர்கள் துணையோடு கடந்த அ.தி.மு.க. ஆட்சியை அழிக்கவும் அனைத்து நிலைகளிலும் துரோகம் செய்த டி.டி.வி.தினகரனுக்கு சரியான பாடம் புகட்டிய கடம்பூர் ராஜூவுக்கு நன்றி தெரிவிப்பது,

தாமிரபரணி, வைப்பாறு நதிநீர் இணைப்பு முதல்கட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி ஏழை எளிய மாணவர்களின் நலன் கருதி புதிய செவிலியர் பயிற்சி பள்ளி தொடங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. பெரும்பாலான ஏழை எளிய மக்கள் செய்து வரும் கால்நடை தொழிலுக்கு கோவில்பட்டியில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. இப்பணிகளை தி.மு.க. அரசு கிடப்பில் போடாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும். 

கோவில்பட்டியில் உற்பத்தியாகும் கடலைமிட்டாயை அங்கன்வாடி மற்றும் சத்துணவு திட்டத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கிட அரசு ஆவன செய்திட வேண்டும். கழக அரசால் கயத்தாறில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்ட அறிவிப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும். 
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி நகராட்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை விட்டுவிட்டு கழகத்தின் வெற்றிக்கு மறைமுகமாக துரோகம் செய்தும், தி.மு.க. ஆட்சி அமைத்திட துணை போன சசிகலாவையும், அவரை சார்ந்தவர்களையும் எக்காரணம் கொண்டும், எந்த நிலையிலும் கழகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று தலைமை கழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அதேவகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளிபாண்டியன், கயத்தாறு நகர செயலாளர் கப்பல் ராமசாமி, கடம்பூர் நகர செயலாளர் கனகவேல், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்