மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 201 பேர் கைது போலீசார் நடவடிக்கை
மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 201 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சக்திகணேசன் கடந்த 14-ந் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
மேலும் சட்டவிரோத செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க 94981 11190 என்ற செல்போன் எண்ணையும் வெளியிட்டார். இதுதவிர மாவட்டத்தில் மணல் கடத்தல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க கடந்த 14-ந் தேதி முதல் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கஞ்சா விற்பனை
அந்த வகையில் கடந்த 4 நாட்களில் மணல் கடத்தியதாக முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்த சதீஷ் (வயது 27), காடாம்புலியூர் சாத்திப்பட்டை சேர்ந்த ஆரோக்கியராஜ் (30), ஆகாஷ், கண்ணாரப்பேட்டையை சேர்ந்த கதிரேசன், பெராம்பட்டு கோபாலகிருஷ்ணன் (32), அரியலூர் மாவட்டம் பெரியாக்குறிச்சியை சேர்ந்த அழகுமுத்து (48) உள்பட 19 பேரையும்,
லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக கடலூர் குப்பன் குளத்தை சேர்ந்த ராமையா (50), சின்ன காரைக்காடு கதிர் (50), மந்தாரக்குப்பம் பொண்ணு, ஆறுமுகம், சிதம்பரம் கந்தன் (52), நசீர், செந்தில் குமார் உள்பட 17 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காட்டாண்டிக்குப்பம் மாயவேல் (28), குறிஞ்சி செல்வன், காசிராஜா, பண்ருட்டி மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த அருண்குமார் (42), தீபன் (34), மூர்த்தி (32), கடலூர் எஸ்.என். சாவடியை சேர்ந்த முருகன் (42), மூர்த்தி (58), விக்னேஷ் (25) உள்பட 24 பேரையும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 5 பேரையும், பணம் வைத்து சூதாடிய 26 பேரையும், சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 110 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
எச்சரிக்கை
இதற்கிடையே மாவட்டத்தில், தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.