குடிமங்கலம்
குடிமங்கலம் அருகே உள்ள சனுப்பட்டி வல்லகுண்டாபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக கடந்த சில தினங்களாக வேலையின்றி தவித்து வந்துள்ளார். கொரோனா பரவல் அதிகமுள்ள 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளில் குடிப்பதற்காக மாவட்ட எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. ஒரு சில இடங்களில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு டாஸ்மாக் மது விற்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் போதிய வருமானம் இன்றி இருந்த பாலகிருஷ்ணன் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்ச எண்ணியுள்ளார். சாராயம் காய்ச்ச சிலிண்டரை பயன்படுத்தி நூதன முறையில் காய்ச்ச முயன்றுள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினருக்கு தெரியவர குடிமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குடிமங்கலம் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களை அழித்தனர். பின்னர் குடிமங்கலம் போலீசார் அவரை கைது செய்தனர்.