கடலூரில் டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி கடலூரில் டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ துறை பணியாளர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நிலையான, உறுதியான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மருத்துவப் பணியாளர் களின் மீது தாக்குதல்களில் ஈடுபடுவோரை விரைவாகவும், கடுமையாகவும் தண்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
அந்த வகையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில், இந்திய மருத்துவ சங்கம் கடலூர் கிளை சார்பில் டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்க கடலூர் கிளை தலைவர் டாக்டர் பாண்டியன் தலைமை தாங்கினார்.
இதில் துணைத்தலைவர் டாக்டர் கேசவன், செயலாளர் முகுந்தன், பொருளாளர் ஆனந்தி மற்றும் டாக்டர்கள் "தேசிய எதிர்ப்பு தினம்" "காப்போரை காப்பீர்" என்ற வாசகம் அடங்கிய கோரிக்கை அட்டையை அணிந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் அனைவரும் கலைந்து சென்று, மருத்துவப் பணியில் ஈடுபட்டனர்.