குமரலிங்கம் பகுதியில் சிறப்புப் பட்டத்தில் கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குமரலிங்கம் பகுதியில் சிறப்புப் பட்டத்தில் கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
போடிப்பட்டி,:
குமரலிங்கம் பகுதியில் சிறப்புப் பட்டத்தில் கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வெல்ல உற்பத்தி ஆலைகள்
மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதியில் ஆண்டுப் பயிரான கரும்பு சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் கரும்பில் பெரும்பகுதி அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதுதவிர வெல்ல உற்பத்தி ஆலைகளுக்கும் கரும்பு உற்பத்தி செய்து வழங்கி வருகிறார்கள். இந்தநிலையில் தற்போது குமரலிங்கம் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் கரும்பு சாகுபடிப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தமிழகத்தைப் பொறுத்தவரை 3 பட்டங்களில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. அந்த வகையில் முதல் பட்டத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களிலும், நடுப்பட்டத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும், பின் பட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களிலும் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால் மடத்துக்குளம் குமரலிங்கம் பகுதிகளைப் பொறுத்தவரை அமராவதி அணையில் நீர் இருப்பு மற்றும் நீர் திறப்பை அடிப்படையாகக் கொண்டே சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டில் அமராவதி அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதாலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதாலும் இந்த ஆண்டில் பாசனத்துக்குத் தேவையான நீருக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்ற நம்பிக்கை உள்ளது.
காய்கறிகள் சாகுபடி
இதனைக் கருத்தில் கொண்டு தற்போது சிறப்புப் பட்டத்தில் கரும்பு சாகுபடி மேற்கொண்டு வருகிறோம். இந்த சீசனில் கரும்புக்கு கூடுதல் விலை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. தற்போது கரும்பு நடவுக்கான நிலம் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. உழவுப் பணிகளை டிராக்டர் மூலம் மேற்கொண்டாலும் நடவுக்கான பாத்தி அமைக்கும் பணிகளை உழவு மாடுகள் மூலம் மேற்கொள்வதுதான் சிறந்ததாக இருக்கும் என்ற அடிப்படையில் உழவு மாடுகளைப் பயன்படுத்துகிறோம். பல ஆண்டுகளாக கரும்புக்கான விற்பனை விலையில் பெரிய அளவில் ஏற்றம் இல்லை.
ஆனால் இடுபொருட்கள் மற்றும் கூலி பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆண்டு முழுவதும் காத்திருந்து போதிய லாபம் கிடைக்காத நிலை, மற்றும் அடிக்கடி ஏற்படும் பாசன நீர்ப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் பல விவசாயிகள் கரும்பு சாகுபடியைக் கைவிட்டு காய்கறிகள் சாகுபடிக்கு மாறிவிட்டனர்.ஆனால் இந்த பருவத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லாததால் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.