காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க கான்கிரீட் அகழிகள்

காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க கான்கிரீட் அகழிகள் அமைக்கப்படும் என்று ஊட்டியில் நடந்த ஆய்வு கூட்டத்துக்கு பிறகு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார்.

Update: 2021-06-18 17:17 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பருவமழை பாதிப்புகளை தடுப்பது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். 

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜனார்த்தன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் கா.ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நீலகிரியில் 18 வயதுக்கு மேல் 6 லட்சத்து 40 ஆயிரம் பேர் உள்ளனர். இதுவரை 2 லட்சத்து 26 ஆயிரத்து 822 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. பழங்குடியின மக்கள் 21 ஆயிரம் பேர் உள்ளனர். 

இன்னும் 11 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டி இருக்கிறது. 5 ஆயிரத்து 429 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். 307 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்கள் முகாமுக்கு வந்து தடுப்பூசி போட முடியாததால் வசிக்கும் இடங்களுக்கு சென்று செலுத்தப்படுகிறது.

 நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் முன்னேற்பாடாக 456 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டது. அங்கு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் வயதான 2 பெண் சிங்கங்கள் உள்ளது. 

சிங்கங்களின் வாழ்நாள் 15 ஆண்டுகள். பூங்காவில் 19 வயது, 23 வயதுடைய 2 சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது. அதிக வயதாகி விட்டதால் தொடர்ந்து 2 மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுவதை தடுக்கவும், வனப்பகுதிக்குள் விரட்டவும் தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது. வனத்துறை மூலம் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டது. மேலும் கிராமப்புறங்களை சுற்றி வெட்டப்பட்ட அகழிகள், மழை பெய்யும் சமயங்களில் மண் சரிவால் மூடும் அபாயம் உள்ளது. 

இதை கருத்தில் கொண்டு நிபுணர்கள் மூலம் ஆராய்ந்து கான்கிரீட் மூலம் அகழி அமைக்க திட்டமிடப்படும். நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்து உள்ளவர்களின் பட்டியல்களை சேகரித்து, அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஊட்டி மாரியம்மன் கோவிலில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் அர்ச்சகர்கள் 16 பேருக்கு ரூ.4 ஆயிரம் நிவாரண தொகைக்கான காசோலை, 15 வகையான மளிகை பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வடிவேலன், மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் முத்துராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்