மலர் செடிகளில் இருந்து விதைகள் சேகரிக்கும் பணி
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனுக்கான நாற்று உற்பத்திக்காக மலர் செடிகளில் இருந்து விதைகள் சேகரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. கோடை சீசனையொட்டி 200-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் மலர் செடிகள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட்டது. மேலும் 25 ஆயிரம் பூந்தொட்டிகளில் செடிகள் நடப்பட்டன. முழு ஊரடங்கால் மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டு, இணையதளம் மூலம் மலர் அலங்காரங்களை கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடர் மழை பெய்து வருவதால் மலர்களில் எப்போதும் தண்ணீர் இருப்பதால் அழுகி வருகின்றன. மலர் மாடம் மற்றும் கண்ணாடி மாளிகையில் மலர்கள் பாதுகாப்பாக உள்ளது.
கோடை சீசனுக்காக நடவு செய்த செடிகளில் மலர்கள் பூத்து ஓய்ந்து உள்ளது. அவை சுற்றுலா பயணிகள் கண்ணில் படாமல் சீசன் முடிந்தது. இதையடுத்து பூங்காவில் 2-வது சீசனுக்கு மலர் நாற்றுகள் உற்பத்தி செய்வதற்காக செடிகளில் இருந்து விதைகள் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளது.
பணியாளர்கள் பூத்து ஓய்ந்த மலர்களில் இருந்து விதைகளை சேகரித்து வருகின்றனர். சால்வியா, மேரிகோல்டு, பென்ஸ்டிமன், டெல்பீனியம், ஆஸ்டர், ஜீனியா உள்ளிட்ட மலர் செடிகளில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அந்த விதைகளை பணியாளர்கள் தரம் பிரித்து காய வைக்கின்றனர்.
தொடர்ந்து தரமான விதைகள் நர்சரியில் விதைத்து பராமரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்கள் வளர்ந்த பின்னர் நடைபாதை ஓரங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.
மேலும் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்ய விதைகள் தரம் பிரித்து பேக்கிங் செய்யப்படுகிறது. தற்போது முழு ஊரடங்கால் பூங்கா மூடப்பட்டு இருப்பதால், விதைகள் சேகரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.