கூடலூர், பந்தலூரில் பலத்த மழை
கூடலூர், பந்தலூரில் பலத்த மழை பெய்தது. மேலும் சாலையோரங்களில் மண் சரிவு ஏற்பட்டதோடு மரங்கள் முறிந்து விழுந்தன.
கூடலூர்,
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று ஊட்டியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. தொடர் மழை காரணமாக ஊட்டியில் பாபுஷா லைன் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. அந்த வழியாக சரக்கு வாகனங்கள் சென்று வருவதால், மேலும் மண் சரிந்து விழும் அபாயம் இருக்கிறது.
இதேபோன்று பந்தலூர் தாலுகாவில் பெய்த பலத்த மழையால் பாட்டவயலில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் பிதிர்காடு பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூடலூர் தீயணைப்புத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர்.
மேலும் அய்யன்கொல்லி அருகே குழிக்கடவு பகுதியில் ஆஷா, பாபு, சுசீலா ஆகியோரது வீடுகளின் அருகில் சாலையோரத்தில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் முதல் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்றும் வீசியதால் பல இடங்களில் மரக்கிளைகளுடன் மின்கம்பிகள் உரசி அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. நேற்று காலை 6 மணிக்கு கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் பாடந்தொரை பகுதியில் மரம் முறிந்து விழுந்தது.
இதனால் அந்த வழியாக அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர். அங்கு சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-9.2, நடுவட்டம்-17, அவலாஞ்சி-130, எமரால்டு-28, அப்பர்பவானி-216, கூடலூர்-37, தேவாலா-39, செருமுள்ளி-30, பாடாந்தொரை-35, பந்தலூர்-55, சேரங்கோடு-56 உட்பட மொத்தம் 731.20 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 25.21 ஆகும்.