கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்திய 10 பேர் கைது
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
சாராயம் கடத்தல்
புதுச்சேரி மாநிலம், காரைக்கால், வாஞ்சூர் பகுதிகளில் கடந்த 8-ந் தேதி முதல் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சாராயம் மற்றும் மதுபானங்கள் மோட்டார் சைக்கிள் மூலம் கடத்தி வருவதை தடுப்பதற்காக நாகை மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கீழ்வேளூர் போலீசார் கீழ்வேளூர் கடை வீதி, கானூர் சோதனை சாவடி பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது மன்னார்குடி, துண்டகட்டளை, திடல் தெருவை சேர்ந்த ரவி மகன் தினகரன் (வயது 22), திருவாரூர், விசாலாட்சிபுரம் மேல தெரு ராஜமாணிக்கம் மகன் கார்த்திகேயன் (36), திருவாரூர், கீழப்படுகை, பெருங்குடியை சேர்ந்த பிரகாசம் மகன் ரமேஷ்குமார் ( 35), கோட்டூர் , மேலபாலக்குடி, தெற்கு தெருவை சேர்ந்த .ராஜேந்திரன் மகன் கார்த்தி (33). திருத்துறைப்பூண்டி சேரன்குளம் பகுதியை சேர்ந்த நெப்போலியன் மகன் மணிகண்டன் ( 32). கீழ்வேளூர், ராமர் மடத்தை சேர்ந்த அழகேசன் மகன் அன்பு ( 24), மேட்டுபாளையம், மெயின்ரோட்டை சேர்ந்த செந்தில் மகன் சரத்கண்ணன் (24) தேவூர், குயவர் தெருவை சேர்ந்த ரெங்கசாமி மகன் பழனிவேல் (38). கொரடாச்சேரி, ஆயிரம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் மணிகண்டன் ( 37), திருத்துறைப்பூண்டி கொற்கை பகுதியை சேர்ந்த தர்மராஜ் மகன் கார்த்தி (32) ஆகிய 10 பேரும் மோட்டார் சைக்கிள்களில் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 10 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயம் மற்றும் 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த ஆதனூர் ஊராட்சி அண்டர் காடு கிராமத்தில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அண்டர் காடு திரவுபதி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பதாகவும், சாராய ஊறல் போட்டு இருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த பகுதிக்கு போலீசார் சென்ற போது அங்கிருந்த 3 பேர் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அங்கிருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் 290 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரை தேடிவருகின்றனர்.
அதே பகுதியில் 110 லிட்டர் சாராயம் மற்றும் 90 லிட்டர் சாராய ஊறல் வைத்திருப்பது தெரிய வந்ததால் அங்கு போலீசார் சென்றனர். அப்போது அங்கு இருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் 110 லிட்டர் சாராயம் மற்றும் 90 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கைது
நெய்விளக்கு கிராமம் நாலுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த பகுதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் 24 புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்தது. இதை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நெய்விளக்கு தெற்கு காட்டை சேர்ந்த சுதாகர் (35) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல்செய்தனர்.