திண்டுக்கல்லில் அரசு பஸ்களை இயக்க முழுவீச்சில் பணிகள்

கொரோனா பரவல் குறைந்ததால் திண்டுக்கல்லில் அரசு பஸ்களை இயக்குவதற்கு முழுவீச்சில் பணிகள் நடக்கின்றன.

Update: 2021-06-18 14:45 GMT
திண்டுக்கல்:
கொரோனா பரவல் குறைந்ததால் திண்டுக்கல்லில் அரசு பஸ்களை இயக்குவதற்கு முழுவீச்சில் பணிகள் நடக்கின்றன.
பஸ் போக்குவரத்து 
தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தது. இதனால் கடந்த மாதம் 10-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி அன்று முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையே கொரோனா பரவல் வெகுவாக குறைந்து விட்டது. எனினும் இதுவரை பஸ்கள் இயக்கப்படாததால், மக்கள் விரும்பிய ஊர்களுக்கு செல்ல முடியவில்லை.
அதேநேரம் குறைந்த அளவில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும் கூடுதலாக ரெயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கொரோனா பரவல் குறைந்ததால் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்க இருக்கிறது. இதற்காக பஸ்களை தயார் நிலையில் வைக்குமாறு அரசு உத்தரவிட்டு உள்ளது.
முழுவீச்சில் பணிகள் 
இதையொட்டி மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் பஸ்களை தயார்படுத்தும் பணி நடக்கிறது. இதில் திண்டுக்கல் மண்டலத்தை பொறுத்தவரை திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 15 பணிமனைகள் மூலம் மொத்தம் 850 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் அந்தந்த பணிமனைகளில் நிறுத்தப்பட்டு உள்ளன.
அதில் ஒருசில பஸ்கள், அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்வதற்கு வசதியாக இயக்கப்படுகின்றன. அந்த பஸ்களுக்கு தினமும் இருவேளை கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்க இருப்பதால், பஸ்களை பழுது பார்த்தல், சுத்தம் செய்தல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடக்கின்றன. மேலும் அரசு உத்தரவிட்டதும் அனைத்து பஸ்களையும் இயக்குவதற்கு முழுவீச்சில் பணிகள் நடக்கின்றன.

மேலும் செய்திகள்