சேலத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன் பெற்றுத்தர தனி மையம்- கலெக்டர் கார்மேகம் தகவல்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன் பெற்றுத்தர தனி மையம் செயல்படும் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-17 23:11 GMT
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன் பெற்றுத்தர தனி மையம் செயல்படும் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் நேற்று 122 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி இல்லை. அதனால் முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை. நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) 32 ஆயிரத்து 750 டோஸ்கள் வந்தன. இதையடுத்து இன்று (நேற்று) மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட 122 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
13.3 சதவீத பேருக்கு தடுப்பூசி
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாநகராட்சி பகுதியில் 2 வார்டுகளுக்கு ஒரு மையம் என்ற அளவில் கூடுதலாக தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தற்போது 30 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. தேவைப்பட்டால் இன்னமும் அதிகரிப்போம். மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். 
45 வயதுக்கு மேற்பட்ட பட்டியலில் 4 லட்சத்து 60 ஆயிரத்து பேரும், 18 முதல் 44 வயது வரை உள்ள ஒரு லட்சத்து 317 பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் இதுவரை 13.3 சதவீத பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் அளவிற்கு வசதி இருக்கிறது. தடுப்பூசிகள் 2 நாட்கள் இடைவெளியில் வந்துகொண்டே இருப்பதால் பொதுமக்களுக்கு தேவையான தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்படுகின்றது. ஆகையால் தடுப்பூசி இல்லை என்று யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
கல்வி கடன்
10-ம் வகுப்பு முடித்தவர்கள் பள்ளி மேற்படிப்பையும், பிளஸ்-2 முடித்தவர்கள் கல்லூரி படிப்பையும் தொடங்க உள்ளனர். இதில் மேற்படிப்புக்கு பணம் ஒரு தேவையாக உள்ளது. நிதி இல்லாத காரணத்தால் மேற்படிப்பை கைவிடும் நிலையில் ஏழை மாணவர்கள் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலை சேலம் மாவட்டத்தில் இருக்க கூடாது என்பதற்காக ஒரு முன்னோட்ட திட்டத்தை தொடங்க உள்ளோம். கல்லூரி படிப்பை மாணவர்கள் தொடர கல்விக்கடனை வங்கிகளில் பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்து உள்ளோம்.
இதுதொடர்பாக முன்னோடி வங்கி, மற்றும் இதர தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளின் மேலாளர்கள், அரசு, தனியார் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். இதில் மகளிர் திட்டம் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் தனியாக மாணவர்களுக்கு கல்விக்கடன் பெற்றுக் கொடுப்பதற்காக தனி மையம் செயல்படும். மகளிர் திட்ட அலுவலரை கண்காணிப்பு அலுவலராக நியமித்துள்ளோம். 
மையத்தில் செலுத்தலாம்
மேலும் அவர் தலைமையில் பல்வேறு அலுவலர்கள் அடங்கிய குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தனி இணையதளம், வாட்ஸ்-அப் உள்ளிட்டவை கொடுக்க உள்ளோம். கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் இந்த மையத்தை அணுகலாம். அதேபோல் பொதுமக்களும், வசதி படைத்தவர்களும், ஏழை மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்த விரும்பினால் இந்த மையம் மூலம் செலுத்தலாம். 
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாநகர நல அலுவலர் பார்த்திபன், அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்