தலைவாசல் அருகே 4,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
தலைவாசல் அருகே 4 ஆயிரத்து 500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.
தலைவாசல்:
தலைவாசல் அருகே 4 ஆயிரத்து 500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.
தீவிர நடவடிக்கை
கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்காததால், பக்கத்துக்கு மாவட்டங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகிறது. இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதனிடையே மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் அதனை தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சாராயம்
இந்த நிலையில் தலைவாசல் அருகே உள்ள கரியகோவிலை அடுத்த முடவன் கோவில் மலைப்பகுதியிலும், ஓடைப்பகுதியிலும் சாராயம் காய்ச்சி கடத்தி விற்பதாக ஆத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆத்தூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் மலைப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். அப்போது முடவன்கோவில் ஓடைப்பகுதியில் சாராய ஊறல்கள் போடப்பட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
4,500 லிட்டர் ஊறல் அழிப்பு
இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது மலைப்பகுதியில் உள்ள ஓடைக்கு அருகில் புதரில் 20 பேரல்களில் மொத்தம் 4 ஆயிரத்து 500 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து, அதனை கொட்டி அழித்தனர்.
மேலும் அங்கு லாரி டியூப்களில் கடத்துவதற்கு தயாராக 1,500 லிட்டர் சாராயம் இருந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் அதனையும் கீழே ஊற்றி அழித்தனர். மலையின் மேல் பகுதியில் ஊறல் போட்டு, சாராயம் காய்ச்சி, அதனை பாக்கெட்டுகளிலும், லாரி டியூப்களிலும் அடைத்து மோட்டார் சைக்கிள்களில் கடத்தியது தெரியவந்தது. இந்த பகுதியில் சாராய ஊறலை போட்டவர்கள் போலீசார் வருவதை அறிந்து தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.