மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரிகார பூஜை தொடங்கியது
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தேவ பிரசன்னத்தில் கூறியபடி முதற்கட்ட பரிகார பூஜையாக மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தேவ பிரசன்னத்தில் கூறியபடி முதற்கட்ட பரிகார பூஜையாக மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது.
கோவிலில் தீ விபத்து
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்தது. அத்துடன் கோவிலில் 2 நாட்கள் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. அதில் கோவிலை விரிவாக்கம் செய்வது உள்பட பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலும், முதல் பரிகாரமாக உடனே மிருத்யுஞ்சய ஹோமம் நடத்த வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து நேற்று மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது.
பரிகார நவக்கலச பூஜை
அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு மிருத்யுஞ்சய ஹோமம், நண்பகல் 12 மணிக்கு பரிகார நவக்கலச பூஜை, 1 மணிக்கு வழக்கமான உச்ச பூஜை போன்றவை நடந்தது.
இதில் ஹைந்தவ (இந்து) சேவா சங்கம், தேவி சேவா சங்கம், பெரிய சக்கர தீவெட்டி முன்னேற்றக்குழு, ஸ்ரீதேவி கலா மன்றம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேவ பிரசன்னத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மலையாள மொழியில் குறிப்பு எழுதப்பட்டது. முழு தகவல்களும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு இன்னும் ஓரிரு நாளில் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையருக்கும் அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு நடத்த வேண்டிய பரிகார பூஜைகள், கட்டுமானங்கள் குறித்து ஆணையர் அலுவலகம் முடிவு செய்யும் என கோவில் நிர்வாக வட்டாரம் தெரிவித்துள்ளது.