டெம்போ மோதி பிளம்பர் பரிதாப சாவு
இருதரப்பினர் வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்த போது டெம்போ மோதி பிளம்பர் பரிதாபமாக இறந்தார்.
குலசேகரம்:
இருதரப்பினர் வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்த போது டெம்போ மோதி பிளம்பர் பரிதாபமாக இறந்தார்.
பிளம்பர்
குலசேகரம் அருகே திருநந்திக்கரையில் வசித்தவர் அரிச்சந்திரன் (வயது 33), பிளம்பர். இவர் நேற்று மாலை குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளும், காரும் லேசாக மோதின. இதனால், இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதை பார்த்த அரிச்சந்திரன் தனது மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஜல்லி ஏற்றிய ஒரு டெம்போ வேகமாக வந்தது.
டெம்போ மோதியது
சாலையில் இருதரப்பினர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த நிலையில் அந்த டெம்போ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. திடீரென அது சாலையோரம் நின்று கொண்டிருந்த அரிச்சந்திரன் மீது மோதியது. இதில் டெம்போ சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உடனே டெம்போ டிரைவர் குலசேகரம் சங்கரன்விளையை சேர்ந்த பால்ராஜ் (33) தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே இந்த விபத்திற்கு சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள்தான் காரணம் என்று அப்பகுதி மக்கள் அவர்களை சிறைபிடித்தனர். தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் அவர்களை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அரிச்சந்திரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த அரிச்சந்திரனுக்கு அனிஷா (25) என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.