முதல் மனைவியை கணவர் சந்திக்க சென்றதால் திருமணம் முடிந்த 3 நாளில் இளம்பெண் தற்கொலை

முதல் மனைவியை கணவர் சந்திக்க சென்றதால் திருமணம் முடிந்த 3 நாளில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-17 19:14 GMT
நெகமம்

முதல் மனைவியை கணவர் சந்திக்க சென்றதால் திருமணம் முடிந்த 3 நாளில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கூலித்தொழிலாளி 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 30), கூலித்தொழிலாளி. 

இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த அமுதா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரித்து மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். தற்போது அங்கு வசித்து வருகிறார். 

இளம்பெண்ணுடன் பழக்கம் 

இந்த நிலையில் கருப்பசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் நெகமம் அருகே ஜக்கார்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார். அப்போது அதேப்பகுதியை சேர்ந்த அம்ச வேணி (24) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. 

அவர் கருப்பசாமிக்கு நெருங்கிய உறவினர் என்பதால் 2 பேரும் திரு மணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கருப்பசாமிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி பிரிந்து சென்றது அம்சவேணிக்கு தெரிந்து இருந்தபோதிலும் அவர் திருமணத்துக்கு சம்மதித்தார். 

2-வதாக திருமணம் 

இந்த நிலையில் 2 பேரும் சேர்ந்து பெற்றோருக்கு தெரியாமல்  திண்டுக்கல் மாவட்டம் பெதப்பம்பட்டிக்கு சென்றனர். அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து கடந்த 14-ந் தேதி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் தாசநாயக்கன்பட்டிக்கு சென்றனர். 

இதை அறிந்த அம்சவேணியின் பெற்றோர் அங்கு சென்று, 2 பேரை யும் ஜக்கார்பாளையத்துக்கு அழைத்து வந்தனர். 

பின்னர் அவர்கள் கருப்பசாமியிடம், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் செய்வது தவறு. 

எனவே நீங்கள், முதல் மனைவியிடம் சென்று விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வந்த பின்னர், எனது மகளுடன் குடும்பம் நடத்துங்கள் என்று கூறி உள்ளனர். 

முதல் மனைவியை பார்க்க சென்றார் 

இதை ஏற்றுக்கொண்ட கருப்பசாமி, தனது 2-வது மனைவியை ஜக்கார்பாளையத்தில் பெற்றோரிடம் விட்டுவிட்டு, முதல்மனைவியிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க திண்டுக்கல் சென்றார். 

இந்த நிலையில் முதல்மனைவியை பார்க்க சென்ற தனது கணவர் திரும்ப வருவாரா? வரமாட்டாரா? என்ற சந்தேகம் அம்சவேணிக்கு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். 

விஷம் குடித்து தற்கொலை 

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அம்சவேணி, சாணிப்பவுடரை (விஷம்) குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில் கிடந்தார். 

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெற்றோர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அம்சவேணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்