வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க ஒளிரும் விளக்குகள் பதிக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க ஒளிரும் விளக்குகள் பதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க ஒளிரும் விளக்குகள் பதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலைப்பாதை
வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு 65 கி.மீ. தூரம் உள்ளது. இதில் மலைப்பாதை மட்டும் 40 கி.மீ. ஆகும். இதில் ஆழியாறு வனத் துறை சோதனை சாவடியில் இருந்து அட்டக்கட்டி பகுதி வரை உள்ள மலைப்பாதையில் பனிமூட்டம் மிகவும் குறைவாகதான் இருக்கும்.
மழைக்காலத்தில் மட்டுமே இங்கு பனிமூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் அட்டகட்டியில் இருந்து வால்பாறை அருகே உள்ள அய்யர் பாடி எஸ்டேட் பகுதி வரை 30 கி.மீ. தூரத்துக்கு இரவு நேரத்தில் பனிமூட்டம் அதிகமாகதான் இருக்கும்.
அறிவிப்பு பலகை
இதன் காரணமாக வாட்டர்பால் எஸ்டேட்டில் இருந்து கவர்க்கல் எஸ்டேட் வரை பனிமூட்டம் அதிகமான பகுதி, கவனமாக செல்லவும் என்று பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மலைப்பாதையின் நடுவே வெள்ளை நிறத்தில் கோடுகள் வரைந்து, அதில் சிவப்பு நிறத்தில் ஒளிரும் விளக்குகள் (ரிப்ளெக்டர்) பதித்து இருந்தனர்.
இதன் காரணமாக இரவு நேரத்தில் சாலையை சரியாக பார்த்து வாகனங்கள் ஓட்ட உதவியாக இருந்தது.
கோடுகள் அழிந்துவிட்டன
இந்த நிலையில் இந்த பாதையில் பல இடங்களில் வெள்ளை நிற கோடுகள் அழிந்ததுடன், ஒளிரும் விளக்குகளும் உடைந்துவிட்டன. இதன் காரணமாக இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக இரவில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் வாகன ஓட்டிகள் பாதையை கண்டுபிடித்து செல்வதற்குள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இதன் காரணமாக அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
உடனடி நடவடிக்கை
இந்த மலைப்பாதையில் தினமும் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எந்தெந்த இடத்தில் வளைவு இருக்கும் என்பது தெளிவாக தெரியும். ஆனால் புதிதாக செல்பவர்களுக்கு எதுவும் தெரியாது.
தற்போது இங்கு மழை பெய்து வருவதால், பகல் நேரத்தில் கூட பனிமூட்டமாக இருக்கிறது. இதன் காரணமாக பகலில்கூட மலைப்பாதை சரியாக தெரிவது இல்லை. இதனால் விபத்துகள் ஏற்படக்கூடிய அபாய நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே நெடுஞ்சாலைத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே வெள்ளை நிறத்தில் கோடுகள் வரைவதுடன், ஒளிரும் விளக்குகளையும் பதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.