8 தாலுகாக்களிலும் ஜமாபந்தி தொடங்கியது இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 தாலுகாக்களிலும் ஜமாபந்தி தொடங்கியது. இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-06-17 18:43 GMT
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 தாலுகாக்களிலும் ஜமாபந்தி தொடங்கியது. இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஜமாபந்தி
ஓசூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஓசூர் நகர்ப்புறம், கிராமப்புறம், ரங்கோ பண்டித அக்ரஹாரம், சென்னத்தூர் வடக்கு, தெற்கு, ஆவலப்பள்ளி, நல்லூர், பேகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரம், ஜுஜுவாடி, சாந்தபுரம், அனுமேபள்ளி, மூக்கண்ட பள்ளி ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி ஓசூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது.
முதல் நாள் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, வாரிசு சான்று உள்ளிட்ட 34 மனுக்கள் வரப்பெற்று தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
உடனடி நடவடிக்கை
மேலும் ஓசூர் வட்டத்தில், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் இணையதளத்தின் மூலம் 186 மனுக்கள் வந்துள்ளன. இந்த மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டார். தொடர்ந்து ஜமாபந்தி நடந்த 13 கிராமங்களின் பதிவேடுகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஓசூர் ஆகிய 8 தாலுகாக்களில் ஜமாபந்தி தொடங்கி உள்ளது. எனவே, பொதுமக்கள், அனைவரும் கொரோனா நோய்த்தொற்று காலம் என்பதால், தங்கள் மனுக்களை https://gdp.tn.gov.in/jamabandhi/என்ற இணைய வழியில் சுயமாக மனு செய்யலாம்.
அடுத்த மாதம்
இதுதவிர இ-சேவை மூலமாகவும், இணைய வழியில் அடுத்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி வரை மனுக்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம். பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்றும் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் பிரபு, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சேதுராமலிங்கம், ஓசூர் தாசில்தார் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியை ஓசூர் சப்-கலெக்டர் குணசேகரன் தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்திருந்த மூன்று மனுக்களை விசாரித்த சப்-கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தாசில்தார் இளங்கோ, தனி தாசில்தார் கோபிநாத், வி.ஏ.ஓ., ஜார்ஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்